வீட்டுக்குள் விவசாயம் - கருத்தரங்கம்
தூத்துக்குடி ஸ்காட் வேளாண் அறிவியல் மையம், பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி மற்றும் பசுமை விகடன் இணைந்து "வீட்டுக்குள் விவசாயம்" என்ற கருத்தரங்கு வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்டது. இவ்விழாவில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருமதி. விஜிலா சத்யானந்த், நெல்லை மாவட்ட ஆட்சியர் திருமதி. ஷில்பா பிரபாகர் சதீஷ், நபார்டு வங்கியின் பொது மேலாளர் திருமதி. சபீனா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இக்கருத்தரங்கில் ஸ்காட் குழுமங்களின் ஆலோசகர் முனைவர் கோபால், பொது மேலாளர்கள் இஃநேசியுஸ் சேவியர் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
தலைமையுரை ஆற்றிய மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த், "இன்றைய காலகட்டத்தில் வீட்டு தோட்டம் மூலம் காய்கறி விளைவிக்கும் பழக்கம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகிலுள்ள ஒரு ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தின் மேற்கூரையில் மூங்கில் கூடைகளைப் பயன்படுத்தி காய்கறிகள் வளர்க்கிறார்கள். இக்கூடைகளை தரையில் வைக்காமல் சவுக்குக் குச்சிகள் மீது அடுக்கி வைப்பதால் கூடைகளின் அடிப்பகுதி சேதாரமாகாது. வீட்டில் காய்கறி தோட்டம் அமைக்கும் விரும்புவோர் முதலில் கத்தரி, வெண்டை, தக்காளி என சில காய்கறிகளையும், கீரைகளையும் வளர்க்கலாம்." என்றார்.
வாழ்த்துரை வழங்கிய நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் , ``சத்து குறைபாடுள்ள உணவு முறையால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பேசினார். மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் சில பள்ளிகளில் காய்கறிகள் மற்றும் கீரைகள் உற்பத்தி செய்து அதனை சத்துணவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்து மாணவர்கள் தங்களின் பெற்றோர், உறவினர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய ஸ்காட் வேளாண் அறிவியல் மையத்தின் தொழில் நுட்ப வல்லுநர் வேல்முருகன், வீடு/மாடி தோட்டம் அமைக்கும் முறைகள் மற்றும் அதனை பராமரிக்கும் முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
இறுதியாகப் பேசிய மதுரை வேளாண் உதவி இயக்குநர் பூச்சி செல்வம், வீட்டு தோட்டத்தில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறைகள் பற்றியும் எடுத்துரைத்தார் . மேலும், வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம் அமைப்பது குறித்து காணொலியும் திரையிடப்பட்டது.
இக்கருத்தரங்கில் அமைக்கப்பட்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளில் காய்கறி விதைகள், வீட்டு தோட்டம் அமைக்க உதவும் உபகரணங்கள், இடுபொருட்கள் மற்றும் பழ மர கன்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் 1000 இக்கும் மேற்பட்ட விவசாய ஆர்வலர்கள், இல்லத்தரசிகள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இக்கருத்தரங்கை வேளாண் அறிவியல் மையத்தின் வல்லுநர்கள் மற்றும் ஸ்காட் ஊரக மேம்பாட்டு திட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தினர்.