பயிர்களுக்கு உரமிடல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்



பயிர்களுக்கு  உரமிடல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

தூத்துக்குடி வேளாண் அறிவியல் மையம்  மாவட்ட அளவில் விவசாயிகளுக்கு   உரமிடல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு வாகைகுளத்தில் நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கிற்கு தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை  சார்ந்த 150 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் திரு.பகவத்சிங் வரவேற்புரையாற்றினார். துவக்க உறை ஆற்றிய பேசிய வேளாண் அறிவியல் மையத்தின் முதன்மை விஞ்ஞானி  மற்றும் தலைவர் மருத்துவர் சீனிவாசன் நிலையத்தின் பணிகள் குறித்தும் மண் பரிசோதனையின் அவசியத்தையும்  எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பேசிய  உதவி வேளாண் இயக்குனர் (தர கட்டுப்பாடு) திருமதி. வசந்தி மண்ணின் வளத்தை  பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சரிவிகித முறையில் உரமிடல் பற்றி தர கட்டுப்பாடு வேளாண் அலுவலர் திருமதி.மலர்விழி எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து பேசிய வேளாண் அறிவியல் மையத்தின் உழவியல் துறை தொழில்நுடப வல்லுநர் திரு முருகன் மண் மாதிரி சேகரிக்கும் விதம், உர பயன்பாடு குறித்த தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தார். உயிரி உரங்கள் மற்றும் பண்ணை கழிவுகளை மடக்க வைத்தல்  குறித்த தொழில்நுட்பங்களை தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் திரு.வேல்முருகன் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 5 விவசாயிகளுக்கு, ஏற்கனவே சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை பரிசோதித்து  மண் வள அட்டையும் வழங்கப்பட்டது.

இக்கருத்தரங்கில் புது டில்லியிலிருந்து மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின்  அமைச்சர் நரேந்திர சிங் தாமோர் அவர்களின் உரமிடல் குறித்த உரை நேரலையாக விவசாயிகள் காணுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அங்கக வேளாண்மை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த விழிப்புணர்வு குறும்படங்களும் ஒளிபரப்பப்பட்டது.

இறுதியாக மனையியல் துறை வல்லுநர் திருமதி. சுமதி நன்றியுரை வழங்கினார்.