நீர் வள மேம்பாடு
நீர் ஆற்றல் மேலாண்மை - உழவர் விழா மற்றும் வேளாண் கண்காட்சி:
தூத்துக்குடி ஸ்காட் வேளாண் அறிவியல் மையம் மற்றும் வேளாண்மை துறை இணைந்து நீர் ஆற்றல் மேலாண்மை - உழவர் விழா மற்றும் வேளாண் கண்காட்சி சாத்தான்குளம் அருகிலுள்ள முதலூரில் நடத்தப்பட்டது.
நீர் வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்த விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் ஏற்பட மத்திய அரசின் நீர் ஆற்றல் அமைச்சகம் மாநில அரசுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சிகள் செப்டம்பர் மாதம் 15ந் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.
இந்தியா முழுவதுமாக 254 மாவட்டங்களில் வறட்சியினால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக கண்டறியப்பட்டு நீர் வளப் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி ஓட்டபிடாரம் மற்றும் சாத்தான்குளம் வட்டாரங்கள் நிலத்தடி நீர் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டு நீர் வள பாதுகாப்பு பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மேற்பார்வையாளர்கள், மாவட்ட ஆட்சியர், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அந்தந்தப் பகுதி மக்களின் பங்களிப்புடன் குளங்கள் தூர் வாருதல், பண்ணை குட்டைகள் அமைத்தல், சமூக காடு வளர்த்தல், அரசு மற்றும் தனியார் பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நீர் வளப் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்குறிப்பிட்டுள்ள வட்டாரங்களில் மேற்பார்வையிட்டு மத்திய மாநில அரசுகளுக்கு அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர்.
நீர் ஆற்றல் மேலாண்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த உழவர் விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் வேளாண் இணை இயக்குநர் திரு. A. ஆசீர் கனகராஜ் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.இவ்விழாவில் உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. பிரியதர்சினி அவர்கள், ஊரக மேம்பாட்டு முகமையின் திட்ட அலுவலர் திரு. S. S தனபதி அவர்கள், மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் முனைவர் S. சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் T.S. பாலசுப்ரமணியன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு.S. சாஹிர்ஹுசைன் , வேளாண்மை இணை இயக்குநர்கள் திருமதி. T. தமிழ்மலர் மற்றும் திரு. N.A.M. ராஜசிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் மையத்தின் முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவர் மரு. வி. சீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார்.
இதனை தொடர்ந்து பேசிய சிறப்பு விருந்தினர்கள் நீர் மேலாண்மையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தனர்.
தொழில் நுட்ப விளக்கவுரை ஆற்றிய கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் T. இரங்கராஜ் மற்றும் தலைவர் முனைவர் திரு. சம்பத்குமார் அவர்கள் விவசாயத்தில் சிறப்பு நீர் பாசன முறைகள், நீர் உபயோக திறன் அதிகரிப்பு முறைகள் பற்றி எடுத்துரைத்தனர். இதனை தொடர்ந்து பேசிய வனவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் குமார் சமூக காடுகள் மற்றும் வேளாண் காடு வளர்ப்பு பற்றி எடுத்துரைத்தனர்.
அடுத்து பேசிய வேளாண் அறிவியல் மையத்தின் உழவியல் துறை தொழில் நுட்ப வல்லுநர் திரு. முருகன் வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிர் ரகங்கள் தேர்வு செய்தல் மற்றும் நீர் வள பாதுகாப்பில் உள்ள உழவியல் தொழில் நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
இது தவிர விழாவில் கலந்துகொண்ட விவசாயிகள் அனைவரும் நீர் வளம் பாதுகாப்பு குறித்த தொழில்நுட்பங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விரிவான 15 அரங்கங்களில் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சாத்தான்குளம், உடன்குடி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளை சார்ந்த நுண்ணீர் பாசனம் மற்றும் பண்ணை குட்டை அமைத்து நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
மேலும் பிரதம மந்திரி கிசான் மந்தான் யோஜனா திட்டத்தின் கீழ் பிரதமமந்திரி விவசாய ஓய்வூதிய திட்ட அட்டை, தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம் மூலமாக தென்னங்கன்றுகள், தென்னை வளர்ச்சி வாரியம் மூலமாக தென்னை நுண்ணூட்ட உரம், தேசிய எண்ணெய் வித்துக்கள் மற்றும் மரப்பயிர் இயக்கத்தின் மூலம் வேம்பு கன்றுகள் மற்றும் புங்கம் கன்றுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
பயிர் பாதுகாப்பு துறை தொழில் நுட்ப வல்லுநர் திரு. முத்துக்குமார் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் 1160க்கும் மேற்பட்ட விவசாயிகள், வேளாண்மை துறை சார்ந்த வல்லுநர்கள், அலுவலர்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியினை தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை அறிவியல் மைய அலுவலர்களும், சாத்தான்குளம், உடன்குடி வட்டார வேளாண் அலுவலர்களும் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்திருந்தனர்.